search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானை நிபுணர்"

    சின்னதம்பி யானை மீண்டும் வனத்தில் வசிக்க வாய்ப்பு இல்லை என்று யானை நல நிபுணர் யானையை நேரில் பார்த்து ஆய்வு செய்த பின்னர் கூறினார். #ChinnathambiElephant
    உடுமலை:

    கோவை தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த சின்னதம்பி காட்டுயானையை வனத்துறையினர் கடந்த 25-ந்தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள வரகளியாறு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

    அங்கு சில நாட்கள் சுற்றிய காட்டுயானை கடந்த 31-ந்தேதி நள்ளிரவு ஆழியாறு அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிப்பட்டினம் என்ற ஊருக்குள் நுழைந்தது. பொள்ளாச்சி வனத்துறையினர் யானையை கோபால்சாமி மலையில் விரட்டி விட்டனர்.

    மறுநாள் 1-ந்தேதி மலை மற்றும் காடு, தோட்டங்களை கடந்து உடுமலை மைவாடி ரெயில் நிலையம் அருகே உள்ள புதருக்குள் யானை நின்றது. 80 கி.மீட்டர் தூரத்துக்கும் மேல் நடந்து வந்த யானை பசி மற்றும் தூக்கத்தால் மயங்கியது.

    யானை ஊருக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனை எதிர்த்து விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா வழக்கு தொடர்ந்தார். சின்னதம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என்று தமிழக அரசு கோர்ட்டில் கூறியது.

    இந்நிலையில் யானையை விரட்ட வந்த கும்கி கலீமும், சின்னதம்பியும் நண்பர்களாகி விட்டன. கரும்பு உள்ளிட்ட உணவு பொருட்களை மாறி மாறி ஊட்டி மகிழ்ந்தன.

    கும்கிகள் கரும்புடன் காப்புக்காட்டுக்கு நடந்தால் அதனை பின் தொடர்ந்து சின்னதம்பியும் செல்லும் என்று யானை நிபுணர்கள் கூறுகிறார்கள். அதன் முதல் கட்டமாக நேற்று யானை படுத்து ஓய்வு எடுக்கும் புதர்களை வனத்துறையினர் வெட்டி அகற்றினர். புதர்களை வெட்டி அகற்றியபோதும் அங்கிருந்து யானை வேறு இடத்துக்கு செல்லாமல் முகாமிட்டுள்ளது.

    இன்று 6-வது நாளாக கிருஷ்ணாபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும் மைவாடி ரெயில் நிலையத்துக்கும் இடையே சின்னதம்பி நிற்கிறது.

    தமிழக முதன்மை வன தலைமை பாதுகாவலர் ஸ்ரீ வத்சவா உத்தரவுபடி யானை நல நிபுணர் அஜய் ஜோசாய் யானையை நேரில் பார்த்து ஆய்வு செய்தார்.

    சின்னதம்பிக்கு தேவையான உணவும், தண்ணீரும் இந்த பகுதியில் கிடைப்பதால் வெளியேற மறுக்கிறது. மேலும் கும்கிகளுடன் நன்றாக பழகி வருகிறது. சின்னதம்பியால் பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்துலும் இல்லை. சின்னதம்பியை வனப்பகுதிக்குள் விட்டாலும், மீண்டும் அது சமவெளிக்கு பகுதிக்கு வர வாய்ப்பு அதிகம் உள்ளது. மீண்டும் சின்னதம்பி யானை வனத்தில் வசிக்க வாய்ப்பு இல்லை.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அறிக்கை வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கரும்பு தோட்டத்தில் 6-வது நாளாக முகாமிட்டுள்ளதால் கரும்பு தோட்டம் சேதம் அடைந்துள்ளது.

    இதுகுறித்து அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் ரமணி தேவி கூறும்போது, கடந்த 6 நாட்களாக சின்னதம்பி யானை முகாமிட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு வழங்க உள்ள விதை கரும்புகளை தான் யானை தின்று நாசம் செய்கிறது.

    விதை கரும்பை தவிர நிர்வாகப் பணிகளும் பாதிக்கப்படுகிறது.

    இது குறித்து வனத்துறைக்கு நிலைமையை எடுத்து கூறியுள்ளோம் என்றார். சின்னதம்பியை பார்க்க பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். பொள்ளாச்சி, உடுமலை, அமராவதி உள்ளிட்ட வன அதிகாரிகள் மற்றும் 80-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் இரவு பகலாக சின்னதம்பியை கண்காணித்து வருகிறார்கள். #ChinnathambiElephant



    ×